வீட்டின் மீது மண்எண்ணெய் குண்டு வீச்சு; வாலிபர் கைது
தூத்துக்குடியில் வீட்டின் மீது மண்எண்ணெய் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜோனாரிஸ். இவருடைய மனைவி ஸ்மைலா (வயது 44). இவர்களுடைய மகன் கார்லின். இவர் தூத்துக்குடி எம்பரர் தெருவை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் கவுதம் (21) என்பவரின் தம்பியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கார்லினுக்கும், கவுதமுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த கவுதம், தனது நண்பர் தாமஸ் நகரை சேர்ந்த சலோம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கார்லின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு 2 மண்எண்ணெய் நிரப்பிய பாட்டிலில் தீவைத்து வீட்டின் மீது வீசினாராம். இதில் ஒரு மண்எண்ணெய் குண்டு வீட்டின் ஜன்னலிலும், மற்றொன்று சுவரிலும் விழுந்து வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டின் ஜன்னல் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமை கைது செய்தனர். சலோமை தேடி வருகின்றனர்.