உறைபனியின் ஆக்கிரமிப்பில் கொடைக்கானல்


உறைபனியின் ஆக்கிரமிப்பில் கொடைக்கானல்
x
தினத்தந்தி 19 Jan 2023 7:00 PM GMT (Updated: 19 Jan 2023 7:01 PM GMT)

உறைபனியின் ஆக்கிரமிப்பால் கொடைக்கானலில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

திண்டுக்கல்

கொடைக்கானலில் உறைபனி

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி நிலவுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாத இறுதியில் உறைபனி காலம் தொடங்கியது. அதன்பிறகு நாளுக்கு நாள் உறைபனியின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக பகல் நேரத்தில் கொடைக்கானலில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இரவில் 10 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே வெப்பநிலை நிலவி வருகிறது, அதிகாலை வேளையில், 6 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.

குறிப்பாக நேற்று அதிகாலை கொடைக்கானலில், 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. இதன் எதிரொலியாக, கொடைக்கானலை மீண்டும் உறைபனி ஆக்கிரமித்துள்ளது.

ரம்மியமான காட்சி

பசுமையான புற்களின் மீது உறைபனி படர்ந்து, வெண்ணிறத்திலான போர்வை போர்த்தியதை போல காட்சி அளிக்கிறது. கொடைக்கானல் கீழ்பூமி, பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உறைபனியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இதேபோல் காலை, மாலை வேளைகளில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. மரம், செடி, கொடிகள் மட்டுமின்றி அடர்ந்த புல்வெளியில் படர்ந்திருக்கும் உறைபனியை குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர்.

உறைபனியின் தாக்கத்தால் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் பரிதவித்தாலும், அதன் ரம்மியமான காட்சி விழிகளுக்கு விருந்து படைப்பதாக உள்ளது என்றே சொல்லலாம். இதற்கிடையே குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடி நடமாடி வருகின்றனர். உறைபனியின் ஆதிக்கம் காரணமாக, அதிகாலையில் திறக்கப்படும் கடைகள் தாமதமாக திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story