எண்ணூரில் மீண்டும் மஞ்சள் நிறத்தில் மாறிய கொசஸ்தலை ஆறு - மீனவர்கள் அச்சம்


எண்ணூரில் மீண்டும் மஞ்சள் நிறத்தில் மாறிய கொசஸ்தலை ஆறு - மீனவர்கள் அச்சம்
x

எண்ணூரில் நேற்று மீண்டும் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர்

எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்களும், இறால்களும் கிடைக்கும். இந்த ஆற்றை நம்பி 8 மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் திடீரென கொசஸ்தலை ஆற்றில் தண்ணீரின் ஒரு பகுதி மஞ்சள் நிறமாக மாறி தோற்றமளித்தது.

இதேபோல் நேற்று மீண்டும் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றை சுற்றி இருக்கும் மத்திய அரசு தொழிற்சாலையில் இருந்து வௌியேறும் கழிவுநீர் மற்றும் ரசாயனம் கலப்பதால் ஆற்றின் நிறம் மாறியது. இதனால் ஆற்றில் இருக்கும் மீன்கள் மற்றும் இறால்கள் இனப்பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த ஆற்றை சுற்றி இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறதா? என்று மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இதற்கான நடவடிக்கையை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 More update

Next Story