"கோவையை காப்பாற்றிய கோட்டை ஈஸ்வரன், இங்கு சூரசம்ஹாராம் நடந்திருக்கு"- வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி
கோவை மக்களை காப்பாற்ற இந்த மண்ணில் சூரசம்ஹாராம் நடந்திருக்கு என்று வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை,
கோவையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் வானதி சீனிவாசன் கூறியதாவது:-
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் முன்பாக நடந்த சிலிண்டர் வெடிப்பு அதன் வாயிலாக ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதனுடைய ஆரம்பகட்ட முயற்சி இறைவனின் கருணையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சங்கமேஸ்வரர் பல நூற்றாண்டுகளாக கோவையை காத்துக்கொண்டிருக்கும் தெய்வம்.
இன்று கந்தசஷ்டியின் முதல்நாள். அதர்மத்தை அழிப்பதற்காக இறைவன் முருகன் எப்படி போரிட்டு சூரசம்ஹாராம் செய்தாரோ.. அதுபோல சூரசம்ஹாராம் கோவை மண்ணில் இந்த மக்களை காப்பாற்ற நடைபெற்றிருக்கிறது.
சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களுக்கு, செயல்களுக்கு கூட கருத்து சொல்லும் அரசியல்வாதிகள் யாரும் கோவை வரவில்லை. கோவை மக்களுக்கு இந்த மாதிரியான செயல்களுக்கு துணை இருக்க மாட்டோம் என உணர்த்த வந்திருக்க வேண்டாமா?
போலீஸ் துறையை தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இடத்தை பார்க்கக் கூட வராது கண்டனத்திற்குரியது.
இந்த வழக்கில் சர்தேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் முதல்-அமைச்சர் ஒப்படைக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவம் பார்க்காமல் கோவைக்கு வர வேண்டும். கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். காவல் துறைக்கும் உளவுத்துறைக்கும் சரியாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.