கோவை கார் வெடிப்பு சம்பவம்: எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க முயற்சி செய்யக்கூடாது கிருஷ்ணகிரியில் வைகோ பேட்டி


கோவை கார் வெடிப்பு சம்பவம்:  எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க முயற்சி செய்யக்கூடாது  கிருஷ்ணகிரியில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:46 PM GMT)

கோவை கார் வெடிப்பு சம்பவம்: எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க முயற்சி செய்யக்கூடாது கிருஷ்ணகிரியில் வைகோ பேட்டி

கிருஷ்ணகிரி

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க முயற்சி செய்யக்கூடாது என்று கிருஷ்ணகிரியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மேகதாது விவகாரம்

தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கிருஷ்ணகிரி வழியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட போகிறது. இதற்கான கட்டுமான பொருட்களை அவர்கள் சேகரித்து வைத்துள்ளனர் என கூறி இருந்தேன். அணையை கட்டக்கூடாது என்று நான் வலியுறுத்தி வந்தேன். மத்திய அரசு மறைமுகமாக மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கிறார்கள் என கூறினேன். மத்திய அரசு, கர்நாடகா அரசைமேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.

கோவை கார் வெடிப்பு

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் முதலில் சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி. மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் கார் வெடிப்பு சம்பவம் அல்ல. அதில் சதி உள்ளது என தெரியவந்துள்ளது. இறந்தவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த பொருட்கள் மூலம் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தற்போது முதல்-அமைச்சர் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கடும் நடவடிக்கை

தமிழகத்தில் இதை போல இனி சம்பவங்கள் நடக்க கூடாது. தற்போது இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமத்துவம், சகோதரத்துவமாக வாழக்கூடிய தமிழகத்தில் பிளவை ஏற்படுத்த நினைக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் உடனடியாக உயர் அதிகாரிகளுடன் அவசர கூட்டம் நடத்தி, கோவையில் உடனடியாக 3 போலீஸ் நிலையங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆக்க முயற்சி செய்யக்கூடாது.

காலூன்ற முடியாது

இந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது. தமிழ் மொழியை காக்க தொடர்ந்து நாங்கள் போராடுவோம். பா.ஜனதாவை பொறுத்தவரையில் தமிழகத்தில் உள்ள மத நல்லிணக்கத்தை சிதைத்து தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் பா.ஜனதாவால் காலூன்ற முடியாது. தமிழக பா.ஜனதா தலைவர் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பாலமுரளி, நகர செயலாளர் அசோக்குமார் ராவ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.


Next Story