எப்போதும் அணி மாறி கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.பி.முனுசாமி


எப்போதும் அணி மாறி கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.பி.முனுசாமி
x

கே.பி.முனுசாமி சொந்த ஊரில் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

சென்னை:

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார். அதே அணியில் இருக்கும் சி.வி.சண்முகத்துடன் கருத்து வேறுபாடு இருக்கிறது. அவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினை பொதுக்குழு மேடையிலேயே வெடித்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தபோது அவருடன் அமர கே.பி.முனுசாமிக்கு இருக்கை போடவில்லை. இதனால் கோபத்தில் வெளியேறிய கே.பி.முனுசாமியை சமாதானப்படுத்தி செய்தியாளர் சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி தன் அருகில் அவரை வைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றபோதும் கே.பி.முனுசாமியை அழைத்து செல்லவில்லை. இது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியது. சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தன்னை புறக்கணிப்பதாகவும் ஆதங்கப்பட்டார்.

கடந்த 2 வாரங்களாக இ.பி.எஸ். வீட்டுப் பக்கம் கே.பி.முனுசாமி எட்டிப்பார்க்க கூட இல்லை. சொந்த ஊரில் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

இதனால் அவர் அதிருப்தியில் இருப்பது கட்சியினர் மத்தியில் வெளிப்படையாக தெரிந்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கே.பி.முனுசாமியை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது.

அவர் விரைவில் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதுபற்றி கே.பி.முனுசாமியை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-

வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். என்னைப்பற்றி தவறாக வதந்தி பரப்பப்படுகிறது. எப்போதும் அணி மாறி கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை. நான் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story