கிருஷ்ணகிரி அணை நிரம்பியது


கிருஷ்ணகிரி அணை நிரம்பியது
x
தினத்தந்தி 11 Oct 2023 7:30 PM GMT (Updated: 11 Oct 2023 7:31 PM GMT)

கிருஷ்ணகிரி அணை நிரம்பியதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1,176 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரி அணை நிரம்பியதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1,176 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணை

தென்பெண்ணை ஆறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது. கெலவரப்பள்ளி அணையில் மதகுகள் மாற்றிமைக்கும் பணிகள் நடைபெறுவதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்ணீர் அலியாளம், எண்ணேகொள்புதூர் உள்ளிட்ட 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணையை வந்தடைகிறது. இதேபோல், குருபரப்பள்ளி அருகே மார்க்கண்டேயன் நதியில் இருந்து வரும் தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

அணை நிரம்பியது

இந்த நிலையில், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 856 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 224 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 440 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 24.27 அடியாக உள்ளது.

கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 699 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,114 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை நிரம்பியது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.50 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. இதற்கு மேல் நீரை தேக்கி வைக்க முடியாது என்பதால் அணையின் பாதுகாப்பை கருதி நேற்று காலை வினாடிக்கு 1,176 கனஅடி தண்ணீர் ஆற்றிலும், பாசன கால்வாய்களிலும் திறந்து விடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்வதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆற்றங்கரையை கடக்க வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றின் அருகில் கட்டி வைக்க வேண்டாம் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மழையளவு

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தில் மழை பெய்தது- நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஓசூர் 28.3, பெணுகொண்டாபுரம் 20.3, கிருஷ்ணகிரி அணை 15.4, தேன்கனிக்கோட்டை 15, கெலவரப்பள்ளி 14, தளி 10, அஞ்செட்டி 5, கிருஷ்ணகிரி 3, போச்சம்பள்ளி 2.3, பாரூர் 1.4 மி.மீ மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை முதலே மாவட்டத்தில் மிதமான சாரல் மழை பெய்தது.


Related Tags :
Next Story