கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து: "சிலிண்டர் வெடிப்பே காரணம்" - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்


கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து: சிலிண்டர் வெடிப்பே காரணம் - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
x
தினத்தந்தி 30 July 2023 7:05 AM GMT (Updated: 30 July 2023 7:46 AM GMT)

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்துக்கு "சிலிண்டர் வெடிப்பே காரணம்" என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் உடல் சிதறி பலியாகினர். இதில் 5 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் வெடி விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் சக்கரபாணி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது காயமடைந்த 9 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், தீவிர சிகிச்சையில் உள்ள 2 பேருக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கினார்.

அதன்பின்னர் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்து, உணவகத்தில் உள்ள சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டுள்ளது. தடயவியல் துறையினர் சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் என அறிக்கை வழங்கி உள்ளனர். தடயவியல் நிபுணர்கள் அளித்த அறிக்கையின்படி சிலிண்டர் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது என்று கூறினார்.


Next Story