கிருஷ்ணகிரி மாணவி பலாத்கார சம்பவம்: தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது


கிருஷ்ணகிரி மாணவி பலாத்கார சம்பவம்: தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது
x

கிருஷ்ணகிரி அருகே மாணவி பலாத்கார சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்கு பிறகு இன்று அந்த பள்ளி திறக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. முகாம் கடந்த 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடந்தது. அதில் பங்கேற்ற 8-ம் வகுப்பு படிக்க கூடிய 13 வயது மாணவி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் சில மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக சிவராமன், உடந்தையாக இருந்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்த சிவராமன், கடந்த 23-ந் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் இறந்தார்.

இந்நிலையில் நேற்று சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே கிருஷ்ணகிரி அருகே கடந்த 8-ந் தேதி மாணவி பலாத்கார சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சோ்ந்த சுதாகர் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அதே போல கடந்த ஜனவரி மாதம் மற்றொரு பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி, 9-ம் வகுப்பு படிக்க கூடிய 14 வயது மாணவி சிவராமனால் பலாத்காரம் செய்யப்பட்டார். அது தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அந்த வழக்கிலும் கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் என்பவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு கொடுமை நடந்த பள்ளி ஒரு வாரமாக செயல்படாமல் இருந்துவந்தநிலையில் இன்று அங்கு பள்ளி திறக்கப்படுகிறது.

1 More update

Next Story