பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x

பூந்தமல்லியை அடுத்த ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்

பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து புதிதாக கட்டும் பணி நடைபெற்றது. தற்போது கோவிலை புதுப்பித்து கட்டும் பணி நிறைவடைந்த நிலையில் அதன் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

இதையடுத்து கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 1-ந் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் என 4 கால பூஜைகளுடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றி சிவாச்சாரியார்களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாவும், முன்னாள் நகரமன்ற தலைவருமான பூவை எம்.ஞானம், நிர்மலா ஞானம் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story