குமுளி அரசு போக்குவரத்து கழக பணிமனையை பஸ் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு


குமுளி அரசு போக்குவரத்து கழக பணிமனையை பஸ் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 Jun 2023 6:45 PM GMT (Updated: 13 Jun 2023 10:06 AM GMT)

குமுளி அரசு போக்குவரத்து கழக பணிமனையை பஸ் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

தேனி

தமிழக-கேரள மாநிலங்களை இணைக்கும் எல்லை மாவட்டமாக தேனி மற்றும் இடுக்கி மாவட்டங்கள் அமைந்துள்ளன. இதில் தேனி மாவட்டத்தில் இருமாநில எல்லை நகரமாக கூடலூர் திகழ்கிறது. இந்த நகரத்தின் 21-வது வார்டு பகுதியாக தமிழக எல்லை குமுளி அமைந்துள்ளது. இங்கு பஸ் நிலையம் கிடையாது. தமிழக அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மட்டுமே உள்ளது. இதனால் தமிழக பகுதியில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றன.

மேலும் தமிழக எல்லை குமுளி பகுதியில் போதிய அளவு நிழற்குடை வசதிகள் இல்லாததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் பரிதவிக்கும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீா்வு காண தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையை லோயர்கேம்பிற்கு இடமாற்றம் செய்து, போக்குவரத்து கழக பணிமனையை பஸ் நிலையமாக மாற்ற அரசு திட்டமிட்டது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து கழக பணிமனை லோயர்கேம்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் குமுளியில் உள்ள பணிமனை பஸ் நிலையமாக மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இங்கு தற்போது ஒரு சில தொலைதூர பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பணிமனையை பஸ் நிலையமாக மாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story