மூதாட்டியை முன்விரோதத்தில் கொலை செய்த தொழிலாளி கைது


மூதாட்டியை முன்விரோதத்தில் கொலை செய்த தொழிலாளி கைது
x

கரூரில் மூதாட்டியை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கரூர்

மூதாட்டி கொலை

கரூர் சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி அமராவதி(வயது 75). இந்த நிலையில் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி பகுதியில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த அமராவதி தலையில் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா (40) என்பவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

தொழிலாளி கைது

விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் பின்வருமாறு:- கருப்பையாவின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர். இவர் கரூர்-கோவை ரோட்டில் தள்ளுவண்டியில் ஓட்டல் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் கருப்பையா ஓட்டலுக்கு பயன்படுத்தி வந்த பாத்திரங்களை அமராவதியின் வீட்டின் அருகே வைத்து கழுவி சுத்தம் செய்துள்ளார்.

இதனால் அமராவதி கருப்பையாவிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இதனால் கருப்பையாவிற்கும், அமராவதிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அமராவதியை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கருப்பையா கூறியதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் கருப்பையாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story