கோவில்களுக்கு கிராம மக்கள் தானமாக வழங்கிய நிலங்களை கையகப்படுத்த கூடாது
கோவில்களுக்கு கிராம மக்கள் தானமாக வழங்கிய நிலங்களை கையகப்படுத்த கூடாது என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தியாகதுருகம் அருகே புக்குளம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில், முனியப்பன், அய்யனார், பிள்ளையார், மாரியம்மன், அங்காளம்மன், வரதராஜ பெருமாள் கோவில் உள்பட 8 கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களை அந்த காலத்திலிருந்து கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர். பொதுமக்கள் சார்பில் நிதி சேகரித்து பல நூற்றாண்டுகளாக சிதிலமடைந்து காணப்படும் கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து வருகிறோம். மேலும் இந்த கோவில்களுக்கு எங்கள் கிராம மக்கள் தானமாக நிலங்கள் வழங்கியுள்ளனர். ஆனால் எங்கள் கிராமத்தில் உள்ள கோவில்களை இந்து சமய அறநிலைத்துறையினர் இதுவரை எந்த பராமரிப்பும் செய்ததில்லை. கோவில் புனரமைப்புமற்றும் கும்பாபிஷேகம் செய்வதற்கு எந்த நிதியும் வழங்கியதில்லை. இந்த நிலையில் கோவிலுக்கு கிராம மக்கள் தானமாக வழங்கிய நிலங்களை இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என கூறி கிராம நிர்வாக அலுவலர் மூலம் நோட்டீஸ் ஒட்டிய இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தற்போது வருவாய்துறையினர் மூலம் நில அளவீடு செய்ய உள்ளனர். எனவே கிராம மக்கள் கோவிலுக்கு தானமாக வழங்க நிலங்களை இந்து சமயஅறநிலையத்துறை கையகப்படுத்த இருப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.