காவல்துறை சார்பில் ஓய்வு பெற்ற போலீசாருக்கு இறுதி மரியாதை - டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு


காவல்துறை சார்பில் ஓய்வு பெற்ற போலீசாருக்கு இறுதி மரியாதை - டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
x

காவல்துறை சார்பில் ஓய்வு பெற்ற போலீசாருக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்து மாநகர, மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால் காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், அன்னாரது இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குனர், காவல் படைத்தலைவர் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும்.

மேலும் இந்நிகழ்வை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும், அக்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும்.

இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும். இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின்போது சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story