பட்ஜெட்டில் அறிவித்த 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் தொடக்கம்: மேயர் பிரியா, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார்


பட்ஜெட்டில் அறிவித்த மக்களைத் தேடி மேயர் திட்டம் தொடக்கம்: மேயர் பிரியா, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார்
x

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த ‘மக்களைத் தேடி மேயர்' திட்டம் நேற்று தொடங்கியது. மேயர் பிரியா பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார். பொதுமக்கள் தெரிவித்த 54 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், "மக்களைத் தேடி மேயர்" என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ராயபுரம் மண்டலம் வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் முதல் கட்டமாக "மக்களைத் தேடி மேயர்" சிறப்பு முகாம் நிகழ்ச்சியினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, அதனை தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, பள்ளிக்கூடத்தில் கட்டிட வசதி, சமுதாயக்கூடம் மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி, குடியிருப்பு வசதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 401 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் பிறப்பு சான்றிதழ் தொடர்பான 53 மனுக்கள் மீது மேயர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்கினார்.

இதேபோல, சொத்துவரி தொடர்பான ஒரு மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதர கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய துறைகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். இந்த நிகழ்வினையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.

முன்னதாக சிறப்பு முகாமில், அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் 5 பயனாளிகளுக்கு மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்கள், 17 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், முதல்-அமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 10 பயனாளிகளுக்கு காசோலைகளும்,

5 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் முதியோர் ஓய்வூதியத்தொகை மற்றும் விதவை உதவித் தொகையும், 10 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ்கள், 5 பயனாளிகளுக்கு பழங்குடியினர் இன சான்றிதழ்கள், 5 பயனாளிகளுக்கு பட்டா மேல்முறையீடு ஆணைகள், 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ் மேல்முறையீடு ஆணைகள், 5 பயனாளிகளுக்கு காலதாமத பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் கமிஷனர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இணை கமிஷனர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், துணை கமிஷனர்கள் விஷூ மஹாஜன் (வருவாய் மற்றும் நிதி), சரண்யா அரி, (கல்வி), எம்.சிவகுரு பிரபாகரன் (வடக்கு வட்டாரம்), நிலைக்குழு தலைவர் (நகரமைப்பு) தா.இளையஅருணா, மண்டலக்குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, மண்டல அலுவலர் (பொ) ஜி.தமிழ்செல்வன், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story