தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, மாணவிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி


தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, மாணவிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி
x

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, மாணவிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டத்திற்குப் பிறகு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

மாணவி ஶ்ரீமதியை இழந்த வேதனையோடு இருக்கின்ற தாய்க்கு அரசு நேரில் சென்று ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் சந்தேகப்படுகிறார்கள். அப்படி ஏதாவது சம்பவம் ஏற்பட்டிருந்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ அவர்களிடம் தெரிவித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

இன்று அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செயலிழந்து இருக்கிறது. இவர்களுடைய அலட்சியத்தால் அந்த தாய்க்கு நீதி கிடைக்காத காரணத்தினால் உற்றார் உறவினர்கள் கொதித்தெழுந்துள்ளனர். இதனால் தான் இன்றைக்கு அந்த பள்ளியில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. மாணவிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் செயலற்ற நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உளவுத்துறை செயலற்று இருக்கிறது.

3 நாட்களாக தங்களுடைய மகளை இழந்த பெற்றோர்கள் நீதிகேட்டு போராடி வருகின்றார்கள். உளவுத்துறை அதை முறையாக துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. இதற்கு முழுமையான காரணம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் மற்றும் அவர் கையில் இருக்கிற காவல்துறையுமே ஆகும். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததே வன்முறைக்குக் காரணம். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த வன்முறையை தவிர்த்திருக்கலாம் என்று கூறினார்.

இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க என்ன ஆதாரங்களை கொண்டு செல்ல வேண்டும். எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை எங்களுடைய எம்எல்ஏக்களுடன் கலந்தாலோசித்தோம் என்று கூறினார்.


Next Story