பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையத்திடம் வழங்கியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்த ஒரு மதத்தினரின், சிறப்புப் பிரிவினரின் உரிமைகளும் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ம.க. தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.

பல்வேறு மதப்பிரிவினரின் சிவில் உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது என்பது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. பல்வேறு மாநாடுகள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் இந்த நிலையை பா.ம.க. தெளிவுபடுத்தியுள்ளது.

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய சட்ட ஆணையம் கருத்துகளைக் கேட்பதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதன் நோக்கம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை விட, சில பிரிவினரின், குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க வேண்டும் என்பதாகவே தோன்றுகிறது.

இதை பொறுப்புள்ள, மதச்சார்பற்ற கட்சி என்ற முறையில் பா.ம.க.வால் ஏற்க முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக இருக்கிறது.

அதன் காரணமாகவே பா.ம.க.வில் பொருளாளர் பதவி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. அவர்களின் உரிமைகளைக் காக்க பல போராட்டங்களை நடத்தியுள்ளது. பா.ம.க. தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடி வருகிறது.

ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story