காஞ்சீபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோர்ட்டுகளில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களைத் தவிர வேறு யாருடைய படங்களையும் வைக்க கூடாது என ஐகோர்ட்டு பதிவாளர் மாவட்ட கோர்ட்டுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
கோர்ட்டுகளில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மாமேதை அம்பேத்கருடைய திருவுருவ படத்தையோ சிலையையோ வைக்க கூடாது என மறைமுகமாக உயர் நீதிமன்ற பதிவாளர் மாவட்ட கோா்ட்டுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக புகார் கூறி காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திடீரென காஞ்சீபுரம் காமராஜர் வீதி சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். வக்கீல்களின் திடீர் சாலை மறியல் காரணமாக காஞ்சீபுரத்தின் முக்கிய சாலையான காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.