போலீசார் தாக்கியதை கண்டித்து வக்கீல்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு
திருத்தணியில் வக்கீலை போலீசார் தாக்கியதை கண்டித்து வக்கீல்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி அடுத்த கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் ஸ்ரீராமுலு (வயது 47). இவர் கடந்த வாரம் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்கு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது ஆஸ்பத்திரியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் செல்வமணி என்பவருக்கும் வக்கீல் ஸ்ரீராமுலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டனர். தகவல் அறிந்தும் திருத்தணி போலீஸ் நிலையத்திலிருந்து சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் 2 போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வக்கீல் ஸ்ரீராமுலுவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 13-ஆம் தேதி திருத்தணி ஒங்கிணைந்த கோர்ட்டில் பார்-அசோசிஷியன், லாயர் அசோசிஷியன் மற்றும் அட்வகேட் அசோசிஷியன் ஆகிய 3 சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, வழக்கறிஞர் ஸ்ரீராமுலுவை தாக்கிய போலீசாரை கண்டித்து 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதாக தீர்மானித்தனர். இதையடுத்து போலீஸ்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மேலும் 3 நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்து வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கறிஞர் ஸ்ரீராமுலுவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் துறையை கண்டித்து தமிழ்நாடு - புதுச்சேரி வக்கீல் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் தலைமையில் திருத்தணி- அரக்கோணம் சாலையில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தால் அரக்கோணம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.