நயினார் நாகேந்திரன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் -அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
ஜனநாயக விரோத செயலில் ஈடுபடும் பா.ஜனதாவுக்கு தமிழக மக்கள் உரிய பாடத்தை தேர்தலில் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சென்னை,
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், 'ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு செலவிட அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி அவர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என அறிவிக்க வேண்டும். ஜனநாயக விரோத செயலில் ஈடுபடும் பா.ஜனதாவுக்கு தமிழக மக்கள் உரிய பாடத்தை தேர்தலில் புகட்ட வேண்டும்' என கூறி உள்ளார்.
அதேபோன்று நயினார் நாகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.