அன்பின் வழியது உயிர்நிலை என்று மனிதம் போற்றுவோம்! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


அன்பின் வழியது உயிர்நிலை என்று மனிதம் போற்றுவோம்! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து இன்று 2-வது கட்டமாக இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை,

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழக மக்கள் சார்பில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்கும் 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்பி வைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, முதல் கட்டமாக சென்னையில் இருந்து ரூ.30 கோடி மதிப்பிலான 9 ஆயிரத்து 45 டன் அரிசி, ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 50 டன் ஆவின் பால் பவுடர், ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் 8 டன் மருந்து பொருட்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பை கப்பல் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், இன்று 2-வது கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வி.டி.சி. சன் என்ற சரக்கு கப்பல் மூலம் ரூ.48 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 14 ஆயிரத்து 712 டன் அரிசி, ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்து பொருட்கள் ஆக மொத்தம் ரூ.67 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 15 ஆயிரம் டன் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

"இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னலுறும் மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, 67.70 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இன்று 2-ஆம் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது.

அன்பின் வழியது உயிர்நிலை என்று மனிதம் போற்றுவோம்!" என்று தெரிவித்துள்ளார்.


Next Story