மக்களின் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து


மக்களின் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து
x

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்', மக்களுக்கு துயரம் ஏற்படும் நேரங்களில் எல்லாம் ஓடோடிச் சென்று, அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து பேருதவி செய்து வருவதையும்; கழக ஆட்சிக் காலங்கள் 'தமிழக மக்களுக்கான பொற்காலங்கள்' என்பதையும் இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும், அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்." என கூறப்பட்டுள்ளது.


Next Story