நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு
நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்ற தமிழ்நாட்டு மக்கள் - மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி (dmk_youthwing), திமுக மாணவர் அணி (dmk_studentwing), திமுக மருத்துவ அணி (MedicalwingDMK) சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் நாளை தொடங்கவுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில், மருத்துவ அணி - மாணவர் அணி நிர்வாகிகளுடன் நாம் தொடங்கி வைக்கவுள்ளோம்.
நீட் ஒழிப்புக்கான இந்த முன்னெடுப்பு, கழக மாவட்டங்கள்தோறும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்வுகளில், பொதுமக்கள் - பெற்றோர்கள் - மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் காப்பதற்காக இடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம்." என்று அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.