தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

பெயர்ப்பலகைகளில் 50 சதவீதம் தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள்-வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கன்னட மொழியில் மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அங்குள்ள மாநகராட்சி அறிவித்திருக்கிறது. கர்நாடக வணிகத்தில் கன்னடமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

கடைகள்-வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர்ப்பலகைகள் தொடர்பாக அரசுக்கு மட்டுமின்றி வணிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தேன். சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வணிகர்களை நேரில் சந்தித்து துண்டறிக்கை வழங்கினேன். அதைத்தொடர்ந்து ஒரு சில வணிகர்கள் தமிழில் பெயர்ப்பலகைகளை அமைத்தாலும், பெரும்பான்மையான வணிகர்கள் அதற்கு தயாராக இல்லை. கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகத்தான் பெயர்ப்பலகைகளில் அன்னை தமிழ் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

எனவே, பெங்களூரு மாநகராட்சியைப் போன்று தமிழக அரசும் இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பெயர்ப்பலகைகளில் 50 சதவீதம் தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். உலகத்தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ந் தேதிக்குள் இதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story