கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்:பெங்களூரு, வடமாநிலங்கள் செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரியில் நிறுத்தம்
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பெங்களூரு, வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரியில் நிறுத்தப்பட்டன.
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பெங்களூரு, வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரியில் நிறுத்தப்பட்டன.
முழு அடைப்பு போராட்டம்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துள்ளது. இதை கண்டித்து கர்நாடகாவில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு நடந்த நிலையில் கன்னட சங்கங்கள், கட்சிகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.
அதேநேரத்தில் நேற்று பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் கன்னட அமைப்புகள் சார்பில் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பெங்களூரு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நேற்று முன்தினம் இரவுடன் ஓசூரில் நிறுத்தப்பட்டன. நேற்று பெங்களூருவுக்கு பஸ்கள் இயக்கப்படாமல் மாநில எல்லையுடன் நிறுத்தப்பட்டன.
லாரிகள் நிறுத்தம்
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு லாரிகள் ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் செல்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வாறு சென்று வருகின்றன. நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு காரணமாக லாரிகள் தமிழக எல்லை வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கிருஷ்ணகிரியிலேயே பெரும்பாலான லாரிகள் நிறுத்தப்பட்டன. சாலையோரம் லாரிகளை நிறுத்திய டிரைவர்கள் அங்கேயே இருந்துவிட்டு மாலைக்கு மேல் லாரிகளை இயக்கினர். இதன் காரணமாக கிருஷ்ணகிரியில் ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் கிருஷ்ணகிரி போலீசாரும், சுங்கச்சாவடி அருகில் இருபுறமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.