மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு
நொய்யல் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி டிரைவர்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கள்ளிப்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் நகல்ராசு (வயது 40). லாரி டிரைவர். இவர் சொந்தமாக லாரி வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் கேரளாவில் இருந்து லாரியில் மரப்பட்டைகளை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம், மூலிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொண்டு வந்தார்.
பின்னர் லாரியில் உள்ள மரப்பட்டைகளை இறக்குவதற்காக லாரியில் மீது ஏறி தார்ப்பாயை அவிழ்த்தார். அப்போது, மேல சென்ற உயர் அழுத்த மின்கம்பியின் மீது நகல்ராசுவின் கை பட்டதாக கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து அவர் மயங்கி விழுந்தார்.
பலி
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் நகல்ராசுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நகல்ராசுவின் மனைவி லதா கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.