சென்னை மனநல காப்பகத்தில் இணைந்த ஜோடி; பணி ஆணைகள் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்


சென்னை மனநல காப்பகத்தில் இணைந்த ஜோடி; பணி ஆணைகள் வழங்கிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

சென்னை மனநல காப்பகத்தில் சிகிச்சைக்கு வந்த இடத்தில் காதல் மலர்கள் இணைந்து இருக்கின்றன. இவர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள் முன்னிலையில் தடல்புடலாக இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்கிறது.

சென்னை

ஆசிரியை

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்துக்கு சிகிச்சை பெற வந்த இருவர் காதல் ஏற்பட்டு தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். 228 ஆண்டுகள் பழமையான மனநல காப்பத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த மகேந்திரனும் (வயது 42), வேலூரை சேர்ந்த தீபாவும் (36)தான் அந்த காதல்ஜோடி. இதில் மகேந்திரன் பி.காம்., எம்.பில்., படிப்பை முடித்தவர். தீபா எம்.ஏ. பி.எட். படித்து முடித்து ஆசிரியையாக பணிபுரிந்தவர்.

மகேந்திரன் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து அதிகளவு கோபத்தினாலும், மனவேதனையினாலும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

கல்யாணம் செய்து கொள்ளலாமா?

இப்படியாக 10 ஆண்டுகளை கடந்த அவர், கடந்த 2020-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர் நலமுடன் இருப்பதோடு, அதே காப்பகத்தில் பணியாளராகவும் சேர்ந்துள்ளார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் தீபாவும், தந்தையின் இறப்பினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து விடுபட மனநல காப்பகத்துக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரை பார்த்த உடனே மகேந்திரனுக்கு ஒருவிதமான பாசம் மலர்ந்தது. ''தனக்கான துணை இவர் தானோ'' என்று மனதில் நினைத்த அவர், அதை உடனடியாக தீபாவிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் தீபா பதில் எதுவும் சொல்லாமல் வேலூருக்கு சென்றுவிட்டார்.

காதலுக்கு பச்சைக்கொடி

மனநல காப்பகத்துக்கு மீண்டும் சிகிச்சைக்காக தீபா வந்தார். அப்போது அவர் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டு இருந்தார். இதை அறிந்த மகேந்திரன் தீபாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார். இதனால் அவருடைய அன்பை ஏற்றுக்கொண்டார்.

காதல் மலர்ந்த சந்தோஷத்தை மகேந்திரன், மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ணா சந்திரிகா, மருத்துவ நிலைய அதிகாரி சுமதி, கூடுதல் மருத்துவ நிலைய அதிகாரி சங்கீதா உள்பட டாக்டர்கள், நர்சுகளிடம் தெரிவித்தார். அவர்களும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர்.

இன்று திருமணம்

தந்தை, தாயை இழந்து தனிமரமாக நிற்கும் மகேந்திரனுக்கு, தீபா ஆதரவாக இருப்பார் என்று நினைத்த அவர்கள், தீபாவின் தாயாரிடம் இதுபற்றி பேசினர். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்ததால், தற்போது காதல் மலர்கள், திருமணத்தில் கைகோர்க்க உள்ளனர்.

வாழ்க்கைக்கு அச்சாரமாக இருந்த மனநல காப்பக வளாகத்திலேயே இவர்களின் திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க இருக்கிறது. திருமண ஏற்பாடுகள், மனநல காப்பகத்தின் இயக்குனர், மருத்துவ நிலைய அதிகாரி, டாக்டர்கள், நர்சுகள் என அனைவரின் கூட்டு முயற்சியில் தடல்புடலாக நடந்து வருகிறது.

திருமண பந்தத்தில் இணைய இருக்கும் மகேந்திரன் வசதியான குடும்ப பின்புலனை கொண்டவர். அமைந்தகரையில் ரூ.40 கோடியில் வீடு, பல கோடி மதிப்பில் நொளம்பூரில் காலியிடங்கள் என குடும்ப சொத்து இருப்பதாகவும், அவருடைய தந்தையின் சொத்தை முறைப்படி பெறுவதற்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

தற்போது ரூ.10 ஆயிரம் மாத வருமானத்தில் மனநல காப்பகத்தில் பணிபுரியும் மகேந்திரன், 'பணம் மன நிறைவை தராது, வாழ்க்கைக்கு தேவையான பணம் கொஞ்சம் இருந்தாலே போதும்' என்கிறார். தீபாவும் மனநல காப்பகத்துக்கு அருகில் உள்ள கடையில் வேலை பார்க்கிறார். திருமணத்தில் இணையும் இவர்கள் காப்பகத்துக்கு அருகிலேயே வாடகை வீட்டில் குடியேற உள்ளனர்.


Next Story