காதல் ஜோடி ஓட்டம்: 2 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பொதுமக்கள் மறியல்

காதல் விவகாரத்தில் 2 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் மதுரா பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகள் சங்கீதா பிரியா. இவர் மாற்று சமூகத்தை சேர்ந்த ராம் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார். திரைபட பாணியில் இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் செல்போனில் இருவரும் பேசியதால் 3 மாதத்திற்கு பிறகு பெண்ணின் பெற்றோருக்கு அவர் திருமணம் செய்ததை கண்டுபிடித்தனர்.
இதனால் பெண்ணின் பெற்றோர் சமரச பேச்சுவார்த்தை நடத்த கிராம பஞ்சாயத்தார் வெங்கடேசன் மற்றும் சங்கர் ஆகியோரை அணுகியுள்ளனர். இதனையறிந்த ராம் மற்றும் சங்கீதா பிரியா இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ஓட்டம் பிடித்தனர். இதனால் ராம் பெற்றோரை கிராம பஞ்சாயத்தார் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தெரிகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு வராமல் இருந்த ராமனின் தாய் லட்சுமியிடம் பஞ்சாயத்தார் சென்று கேட்டுள்ளனர்.
எனவே ராமின் தாய் லட்சுமி, கிராம பஞ்சாயத்தார் மீது மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் விசாரணைக்காக வெங்கடேசன் மற்றும் சங்கர் ஆகியோரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலை பட்டரை பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா உறுதியளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.