காதல் திருமண விவகாரம்: இளம்பெண் குருத்திகா, தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக போலீசார் அறிக்கை -மதுரை ஐகோர்ட்டில் இன்றைக்கு மீண்டும் விசாரணை


காதல் திருமண விவகாரம்: இளம்பெண் குருத்திகா, தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக போலீசார் அறிக்கை -மதுரை ஐகோர்ட்டில் இன்றைக்கு மீண்டும் விசாரணை
x

காதல் திருமண விவகாரத்தில் இளம்பெண் குருத்திகா, தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக மதுரை ஐகோர்ட்டில் தென்காசி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மதுரை


காதல் திருமண விவகாரத்தில் இளம்பெண் குருத்திகா, தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக மதுரை ஐகோர்ட்டில் தென்காசி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

காதல் திருமணம்

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் வினித் (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நவீன் படேல் என்பவரின் மகள் குருத்திகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. குருத்திகாவின் குடும்பத்தினர் குஜராத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் சமீபத்தில் குருத்திகாவும், வினித்தும் உறவினர்கள் முன்னிலையில் நாகர்கோவிலில் திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து நவீன் படேல் குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். அதுசம்பந்தமான விசாரணைக்கு ஆஜராகிவிட்டு சென்றபோது, வினித்தை தாக்கி, குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்றுள்ளனர்.

ரகசிய வாக்குமூலம்

இதையடுத்து தனது மனைவியை மீட்டு ஆஜர்படுத்தக்கோரி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று வினித், மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, கடந்த 7-ந்தேதி குருத்திகாவை போலீசார் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதிகள், அவரை காப்பகத்தில் தங்க வைத்து உரிய விசாரணை நடத்தி, அதுசம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என்று தென்காசி மாவட்ட போலீசுக்கு உத்தரவிட்டனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக குருத்திகாவிடம் போலீசார் விசாரித்தனர். செங்கோட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி, அவரிடம் ரகசிய வாக்குமூலமும் பெறப்பட்டது.

போலீசார் அறிக்கை தாக்கல்

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குருத்திகா அளித்த வாக்குமூலத்தின் அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தென்காசி போலீசார், நீதிபதிகளிடம் சமர்ப்பித்தனர்.

அதை படித்துப்பார்த்த நீதிபதிகள், தனது பெற்றோருடன் குருத்திகா செல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்ததாக போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது, என்றனர்.

பெண்ணின் விருப்பம்

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் சார்பிலான வக்கீல், குருத்திகாவிடம் முறையான விசாரணை நடத்தவில்லை என குற்றம்சாட்டினார்.

அதற்கு நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை பொறுத்தவரையில் மீட்கப்பட்டவர் யாருடன் செல்வதாக தெரிவிக்கிறாரோ, அவரது விருப்பத்தைத்தான் கோர்ட்டு நிறைவேற்றும் என்றனர்.

பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, குருத்திகாவின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர், என்றார். குருத்திகாவின் பெற்றோர் சார்பில் ஆஜரான வக்கீல், பெற்றோர் தலைமறைவாக இருந்தாலும் குருத்திகாவை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என்றார்.

உறவினர்களுக்கு உத்தரவு

இதனையடுத்து நீதிபதிகள், குருத்திகா உறவினர்கள் தரப்பில் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதனை போலீசார் முறையாக விசாரணை செய்ய வேண்டும். குருத்திகாவின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் எனக் கூறி, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர். மேலும் குருத்திகா பெற்றோர் தரப்பு வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரத்தில் அவதூறாக தகவல்கள் பரப்பப்படுகின்றன என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், நீங்களே புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டதனால்தான், செய்திகளில் அவை வெளியிடப்படுகின்றன. மீடியாக்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.


Next Story