ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குறைந்த நீர்வரத்து... குளிக்கவும் பரிசல் இயக்கவும் அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குறைந்த நீர்வரத்து... குளிக்கவும் பரிசல் இயக்கவும் அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தர்மபுரி,

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 5 ஆயிரத்து 779 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இது மேலும் குறைந்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். ஆனால் அருவியில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுஒருபுறம் இருக்க தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால் கடந்த நான்கு நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகள், பரிசல் ஓட்டிகள் மற்றும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story