செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க சொன்னவர் மு.க.ஸ்டாலின் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அமைச்சர் செந்திலாபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கமாறு எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை,
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
போக்குவரத்து துறையில் வேலை பெற்றுத்தருவதாக பணம் பெற்று மோசடி என வழக்கு உள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படியே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் சரியானவை என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலை வாங்கித்தருவதாக பணமோசடி தொடர்பாகவே விசாரணை நடக்கிறது. பணத்தை திருப்பி அளித்து விட்டோம் என்று கூறினால் தவறு சரியாகி விடாது. மொரிசீயஸ் உட்பட வெளிநாடுகளுக்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டரீதியாக நடக்கும் விசாரணையில் எங்கே அரசியல் காழ்புணர்ச்சி வந்தது? செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் கடுகளவு கூட காழ்ப்புணர்ச்சி இல்லை.யாரையும் பழிவாங்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை.செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை பாயும் என்பது முன் கூட்டியே தெரிந்தது தான்.உரிய ஆதாரங்கள் இருப்பதால் தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து எந்த இடத்திலும் கடுகளவு கூட மோசமாக பேசியதே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.