மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயர் மாற்றமா? - மத்திய அரசு ஆலோசனை...!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியால் மதுரை மக்கள் மட்டுமல்ல, தென் தமிழக மக்கள் அனைவரும் தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் மதுரை உட்பட நாடு முழுவதும் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று கூறப்படுகின்றது.
அந்த வகையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெயர் சூட்டுவதற்காக, உள்ளூர் சுதந்திர போராட்ட வீரர்கள், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று மறைக்கப்பட்ட தியாகிகள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 4 பெயர்கள் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பெயர் வைப்பதற்கான காரணங்களை விளக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது, மதுரை, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், நாக்பூர் உட்பட எய்ம்ஸ், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் என 23 மருத்துவமனைகளுக்கு பொருந்தும் என தகவல் வெளியாகியுள்ளது.