மதுரை: ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார்-இடைத்தரகர் கைது


மதுரை: ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார்-இடைத்தரகர் கைது
x

மேலூர் தாலுகா அலுவலகத்தில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் மற்றும் இடைத்தரகரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அலுவலகத்தில் மணிகண்டன்(46) என்பவர் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். மேலூர் கருத்தபுளியன்பட்டியில் வசிக்கும் பிரபு என்பவர் தனது மனைவி மாலதிக்கு ரூ.15 லட்ச சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக துணை தாசில்தார் மணிகண்டனை அணுகியுள்ளார்.

அதற்கு அவர் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த தொகையை புரோக்கர் மூக்கனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிரபு தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பிரபுவிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் பிரபு, அம்பு ரோஸ், சூரியகலா, பாரதி பிரியா குமரகுரு நேற்று மாலை 6 மணி அளவில் மேலூர் தாலுகா அலுவலகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தாலுகா அலுவலகம் சென்று பிரபு துணை வட்டாட்சியர் மணிகண்டனிடம் லஞ்ச பணத்தை புரோக்கர் மூக்கனிடம் கொடுக்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் கொடுக்குமாறு சமிக்கை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச பணத்தை மூக்கனிடம் கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மூக்கனையும், துணை தாசில்தார் மணிகண்டனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

துணை தாசில்தார் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டது மேலூர் தாசில்தார் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story