மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 3 நாளில் பெண் குழந்தை சாவு- போலீசார் விசாரணை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்தது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்தது.
அறுவை சிகிச்சை
மதுரை அலங்காநல்லூர் கல்லாணை காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 30). இவருடைய மனைவி நாகஜோதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவதாக நாகஜோதி கருவுற்று பிரசவத்திற்காக அலங்காநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுதிணறலால் குழந்தை சிசு நலப்பராமரிப்பு பிரிவிலும், நாகஜோதி வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.
விசாரணை
சம்பவத்தன்று பிறந்த 3 நாளான நிலையில் நாகஜோதி குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்து விட்டு வார்டுக்கு வந்து விட்டார். அதன்பின்னர் திடீரென்று குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இளங்கோவன் அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.