திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கியது சரிதான் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கியது சரிதான் -  மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கியது சரிதான் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை:

மதுரையைச் சேர்ந்த மூக்கன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழக நெடுஞ்சாலைத்துறையில் கேங் மஸ்தூராக பணியாற்றினேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பை முடித்ததால் கடந்த 2015-ம் ஆண்டில் சாலை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றேன்.

இந்தநிலையில் எனது பட்டயப்படிப்பை வைத்து பதவி உயர்வு அளிக்க முடியாது என்று கூறி, என்னை மீண்டும் கேங் மஸ்தூராக பதவி இறக்கம் செய்து மதுரை கோட்ட பொறியாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, என்னை சாலை ஆய்வாளர் பதவியில் நியமித்து உரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் சாலை ஆய்வாளர் பதவி உயர்வு பெறுவதற்கு மேற்கண்ட திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டயப்படிப்பு சான்றிதழ் போதுமானது. இதே பட்டயப்படிப்பு முடித்தவருக்கு பதவி உயர்வு வழங்க ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் மனுதாரரும் பதவி உயர்வு பெற தகுதியானவர்தான். எனவே அவரை பதவி இறக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சாலை ஆய்வாளராக மனுதாரர் பணியை தொடருவதற்கான உத்தரவை 4 வாரத்தில் உரிய அதிகாரி பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு கிடைத்த 8 வாரத்தில் அவருக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story