நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களை ஒரு மாதத்தில் கைது செய்யாவிட்டால் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும்- மதுரை ஐகோர்ட்டு கண்டிப்பு


நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களை  ஒரு மாதத்தில் கைது செய்யாவிட்டால் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும்- மதுரை ஐகோர்ட்டு கண்டிப்பு
x

பல கோடி ரூபாய் மோசடியில் நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குனர்களை ஒரு மாதத்தில் கைது செய்யாவிட்டால் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என மதுரை ஐகோர்ட்டு கண்டிப்புடன் தெரிவித்தது.

மதுரை


பல கோடி ரூபாய் மோசடியில் நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குனர்களை ஒரு மாதத்தில் கைது செய்யாவிட்டால் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என மதுரை ஐகோர்ட்டு கண்டிப்புடன் தெரிவித்தது.

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நியோமேக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற பணத்தை மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த கவுதமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தொடந்த வழக்கு நேற்று நீதிபதி ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிலும் சிலர் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். இந்த வழக்கு பல கோடி ரூபாய் மோசடி தொடர்பானது. வழக்கு தொடர்ந்ததால் மனுதாரரை தொலைபேசியில் மிரட்டுகின்றனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

அரசு தரப்பில் பதில்

அப்போது, இந்த மோசடி தொடர்பாக 93 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை 11 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கமலகண்ணன், சிங்கரவேலன் என 2 முக்கிய இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 9,500 ஆவணங்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது என்று அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் 90-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 11 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, "நிறுவனத்தின் அனைத்து இயக்குனர்களையும் ஒரு மாதத்துக்குள் கைது செய்து சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையெனில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டியிருக்கும்" என்று கண்டிப்புடன் தெரிவித்தார். பின்னர் தீர்ப்புக்காக வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


Next Story