மீன்பிடி உரிமையை மீனவ சங்கங்களுக்கு வழங்கும் திட்டம் - அரசு மறுபரிசீலனை செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு


மீன்பிடி உரிமையை மீனவ சங்கங்களுக்கு வழங்கும் திட்டம் - அரசு மறுபரிசீலனை செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு
x

பொதுமக்களின் பணம் சிலரின் ஆதாயத்திற்காக வீணாக்கப்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மதுரை,

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள தாமரைக்குளம் கண்மாய் மீன்பிடி உரிமை, டெண்டர் விடாமல், பெரியகுளம் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டது. அதனை, கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்த தேனியைச் சேர்ந்த முருகேந்திரன் என்பவர், பிரசாந்த், துரைப்பாண்டி ஆகியோருக்கு உள்குத்தகைக்கு வழங்கியுள்ளார். இந்த விதிமீறலால் முருகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, முருகேந்திரன் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரருக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலமான, ஆறு மாதம் நிறைவடைந்துவிட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், பொது குளங்களின் மீன்பிடி உரிமையை டெண்டர் விடாமல், உள்ளூர் மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவது தொடர்பான திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்து, பொதுமக்களின் பணம் சிலரின் ஆதாயத்திற்காக வீணாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.


Next Story