பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை - ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை - ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்தனர். என்னை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். என் மீது லாட்டரி விற்பனை செய்ததாக ஏற்கனவே 17 வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டில் நான் போலீசார் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு என்னை பல்வேறு வகையில் துன்புறுத்தினார் கள். அதற்கு மறுத்ததால் நான் 21 கிலோ கஞ்சா கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இது முற்றிலும் பொய் வழக்கு. எனவே என் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். எனக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் லாட்டரி வியாபாரி. இவர் கஞ்சா கடத்தியதாக பொய் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் சிறையில் அடைத்து உள்ளனர். இதுதொடர்பாக மதுரை திலகர் திடல் போலீஸ் நிலையத்தின் கண்காணிப்பு கேமரா பதிவுகள், மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் உள்ள கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. தலைமையிலான போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கில் தொடர்புடைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் 15 நாள் கண்காணிப்பு கேமரா பதிவுகள்தான் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனாலும், இந்த வழக்கில் மனுதாரர் மீது இன்ஸ்பெக்டர் பூமிநாதன் பொய் வழக்குப்பதிவு செய்திருக்கலாம் என தெரிகிறது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது.

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. விசாரிக்க வேண்டும். மனுதாரர் மீது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் பொய் வழக்குப்பதிவு செய்தது உறுதியானால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுசம்பந்தமாக 3 மாதத்தில் இந்த கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story