மதுரை: சுற்றுலா ரெயிலில் திடீர் தீ விபத்து; பலி 7 ஆக உயர்வு


மதுரை:  சுற்றுலா ரெயிலில் திடீர் தீ விபத்து; பலி 7 ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 Aug 2023 2:04 AM GMT (Updated: 26 Aug 2023 2:42 AM GMT)

மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா ரெயில் பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை,

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் ரெயிலானது, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ரெயில் பெட்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, ரெயிலில் கடைசியாக இருந்த சிறப்பு முன்பதிவு ரெயில் பெட்டியில் 90 பேர் இருந்துள்ளனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் தப்பியோடி விட்டனர்.

7 பேர் பலி

எனினும், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு தீ விபத்து, அதன் தொடர்ச்சியாக எழுந்த புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தில் உயிரிழந்த 5 பேரும் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில்வே அதிகாரிகள், மருத்துவ குழுவினர், பாதுகாப்பு படையினர், வருவாய் துறையினர் சம்பவ பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

காரணம் என்ன?

ரெயிலில் சுற்றுலா பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த ரெயில் பெட்டியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, மற்றொரு ரெயில் அந்த பகுதியை கடந்து சென்றது. இதனால், ரெயிலில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லாத நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இதனை தொடர்ந்து, தீயை அணைக்கும் பணி முழுமையடைந்து உள்ளது. அந்த ரெயில் பெட்டி தனியாக கொண்டு செல்லப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி மதுரை கலெக்டர் சங்கீதா நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.


Next Story