மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்வதி யானையை பாகன் தாக்கியதால் பரபரப்பு


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்வதி யானையை பாகன் தாக்கியதால் பரபரப்பு
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்வதி யானையை பாகன் தாக்கியதில் ரத்தம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக் கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும்.

இந்தாண்டு ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கடந்த 28-ந் தேதி முதல் வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான், ஆகியோரின் சிறப்பு இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளிப்பர்.

அதன்படி 8-ம் நாள் விழாவான இன்று காலை சுவாமி வீதி உலா நடந்தது. அப்போது சுவாமியின் முன்பு பார்வதி யானை நடந்து சென்றது.

வடக்கு-கிழக்காடி வீதி சந்திப்பில் உள்ள 16-ம் கால் மண்டபத்தில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதையொட்டி பார்வதி யானை சுவாமியை 3 முறை வலம் வந்து மண்டியிட்டு துதிக்கையை தூக்கி சுவாமிக்கு மரியாதை செய்வது வழக்கம்.

அதற்காக யானையை பாகன் மரியாதை செய்ய வைக்க முயன்ற போது அது பிளிறியதாக கூறப்படுகிறது. அதை கண்டு அங்கிருந்த பக்தர்கள் பயந்து விலகி சென்றனர்.

உடனே பாகன் யானையை கட்டுப்படுத்த அங்குசத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் யானையின் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனே பாகன் யானையை அங்கிருந்து அழைத்து சென்றார். மேலும் யானை சென்ற வழி எல்லாம் ரத்தமாக இருப்பதை கண்டு பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

ஏற்கனவே யானை பார்வதி கண் புரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் யானை தாக்கப்பட்ட சம்பவம் கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story