மகாத்மா காந்தி உருவச்சிலை சேதம்
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி உருவச்சிலை சேதம் அடைந்தது.
செங்கம்
செங்கம் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளியில் உள்ள மகாத்மா காந்தி உருவச் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். இன்று அதிகாலை இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சேதம் அடைந்த மகாத்மா காந்தி உருவச் சிலை சீரமைக்கும் பணியை துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ராஜ் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவித்தனர்.
மேலும் இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இரவு நேரங்களில் யாரும் உள்ளே நுழையாமல் பாதுகாப்பை உறுதி செய்திடவும், இரவு நேரங்களில் பள்ளி வளாகம் முழுவதும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.