மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை: சீமான்


மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை: சீமான்
x
தினத்தந்தி 9 Dec 2023 11:08 AM GMT (Updated: 9 Dec 2023 4:11 PM GMT)

மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ததற்கு நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

"திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்புச்சகோதரி மஹுவா மொய்த்ரா அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும்.

நாடாளுமன்றத்தில் சகோதரி மஹுவா மொய்த்ரா எழுப்புகின்ற அடுக்கடுக்கான கேள்விகளை எதிர்கொள்ள முடியாத மோடி அரசு, பழிவாங்கும் நோக்குடன் முறையற்ற வகையில் அவரை பதவி நீக்கம் செய்து இந்திய அரசியலமைப்பையும், மக்களாட்சி மாண்பையும் கேலி கூத்தாக்கியுள்ளது. தங்களது ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்ற பாஜகவின் இத்தகைய கொடும் மனப்பான்மை கோழைத்தனமானதாகும்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, முத்தலாக் தடைச்சட்டம், குடியுரிமை திருத்தச்சட்டம், என்று நாட்டு மக்கள் மீதான பாஜக அரசின் அடுத்தடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்குள் மக்களின் மனச்சான்றாக நின்று, துணிச்சலாக ஓங்கி ஒலித்த ஒற்றைக்குரலையும் அதிகார கொடுங்கரம் கொண்டு நசுக்கியுள்ளனர் நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள். சகோதரி மஹுவா மொய்த்ரா எழுப்பிய ஏதாவது ஒரு கேள்விக்கு பிரதமர் மோடியிடமோ அல்லது அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களிடமோ, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ பதில் இருந்துள்ளதா? நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக தொடர்ந்து கேள்வி எழுப்பினார் என்ற காரணத்திற்காகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றால் இந்த நாடும், அரசும் ஏழை, எளிய மக்களுக்கானதா? அல்லது அம்பானி, அதானிக்கானதா? மஹுவா மொய்த்ரா யார் சொல்லி கேள்வி கேட்டார் என்று நீதி விசாரணை செய்தவர்கள், அவர் கேட்ட கேள்விகள் சரியா? தவறா? என்பதற்கு எந்த விசாரணையும் இதுவரை செய்யாதது ஏன்?

கௌரி லங்கேஷ், கல்புர்கி என்று தங்களது பாசிசப் போக்கிற்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களின் குரல்களை எல்லாம் படுகொலைகள் மூலம் நிரந்தரமாக நிறுத்தியவர்கள் தற்போது நாடாளுமன்றத்தின் குரல்வளையையும் நெரிக்க தொடங்கியுள்ளது வெட்கக்கேடானது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது, உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, அடிபணியாத எதிர்க்கட்சி உறுப்பினர்களை வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகளை ஏவி மிரட்டி அடிபணியச்செய்வது என்ற பாஜகவின் அதிகார கொடும்போக்கின் அடுத்த படிநிலையே தற்போது சகோதரி மஹுவா மொய்த்ராவின் சிறிதும் அறமற்ற பதவி நீக்கமாகும்.

அதிகாரம் நிலையானது என்ற மமதையுடன் பத்தாண்டு காலமாக பாஜக அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய கொடுங்கோன்மை நடவடிக்கைகளுக்கு வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார் .


Next Story