காவிரி மேம்பாலத்தில் பராமரிப்பு பணி - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
பாலத்தின் பராமரிப்பு பணிகள் முடியும் வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருச்சி,
திருச்சியில் 46 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காவிரி மேம்பாலம் பல்வேறு இடங்களில் விரிசல் அடைந்தும், தூண்கள் மோசமான நிலையிலும் உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாலத்தின் பராமரிப்பு பணிகளுக்காக 6 கோடியே 87 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் காவிரி மேம்பாலம் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 10-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு மாற்று வழிகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து செல்வதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார், பாலத்தின் பராமரிப்பு பணிகள் முடியும் வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.