தரமற்ற விதைகளால் மக்காச்சோள மகசூல் பாதிப்பு
குடிமங்கலம் பகுதியில் தரமற்ற விதைகளால் மக்காச்சோளம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குடிமங்கலம் பகுதியில் தரமற்ற விதைகளால் மக்காச்சோளம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்காச்சோளம் சாகுபடி
குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. மக்காச்சோளம் 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதாலும் குறைந்த அளவு தண்ணீர், மற்ற பயிர்களை காட்டிலும் செலவுகுறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம் அருகே மசக்கவுண்டன்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் ஒரு செடியில் இரண்டு மூன்று கதிர்கள் வந்துள்ளதாகவும், மேலும் கதிர்கள்மணி பிடிக்காமல் மகசூல் குறைந்து காணப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மகசூல் பாதிப்பு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி பொன்னுச்சாமி கூறியதாவது:-
தனியார் நிறுவனத்தின் மூலம் விதைகளை வாங்கி மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளேன். சாகுபடி செய்து 60 முதல் 80 நாட்கள் ஆன நிலையில் ஒரு செடியில் ஒரு கதிருக்கு பதிலாக மூன்று கதிர்கள் காணப்படுகிறது. மூன்று கதிர்களும் மணி பிடிக்காமல் உள்ளது. மேலும் ஒரு சில செடியில் இரண்டு கதிர்கள் காணப்படுகிறது. அதில் பாதி அளவுக்கு குறைவாகவே மணி பிடித்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் மகசூல் பாதிப்பு காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற விதைகள் காரணமாகவே மக்காச்சோளம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.