காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம் சேதம்
வத்திராயிருப்பு அருகே காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம் சேதமடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம் சேதமடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மக்காச்சோள சாகுபடி
வத்திராயிருப்பை அடுத்த வ.மீனாட்சிபுரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மா, தென்னை, தட்டாம் பயறு, உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் அறுவடைக்கு மக்காச்சோளம் தயார் நிலையில் உள்ளது.
விவசாயிகள் கவலை
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நள்ளிரவில் உணவு தேடி கீழே இறங்கி வரும் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள கதிர்களை தின்றும், சோளத்தட்டைகளை சாய்த்து அட்டகாசங்கள் செய்து வருவதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
தொடர்ந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிவாரணம்
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இதனால் நாங்கள் பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். மலைப்பகுதியில் இருந்து விளை நிலங்களுக்குள் விலங்குகள் புகுந்து விடாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.