பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு; முதன்மை செயலர் புதிய நடைமுறைகளை கொண்டு வரலாம் - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து


பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு; முதன்மை செயலர் புதிய நடைமுறைகளை கொண்டு வரலாம் - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து
x

முறைகேடுகளை தடுக்க பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மதுரை,

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில், ஏழைகளுக்கு வீடு கட்ட பிரதமர் நிதியில் இருந்து ரூ.2.40 லட்சம் வழங்கும் திட்டத்தில், இறந்தவர் பெயரில் வீடு கட்ட நிதி ஒதுக்கி முறைகேடு செய்த அதிகாரிகள் மீது ஊழல், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏழைகள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க சென்னை ஐகோர்ட்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது என்று தெரிவித்தனர்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க முதன்மை செயலர் புதிய நடைமுறைகளை கொண்டு வரலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், முறைகேடுகளை தடுக்க பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யலாம் என்று அறிவுறுத்தினர்.

அதே சமயம், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலரிடம் தகவல் தெரிவிக்க கால அவகாசம் தேவை என கோரப்பட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை கடிதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.




Next Story