'மாண்டஸ்' புயலில் இருந்து தப்பிய மாமல்லபுரம்


மாண்டஸ் புயலில் இருந்து தப்பிய மாமல்லபுரம்
x

மாண்டஸ் புயலானது மாமல்லபுரம் அருகே கரையை கடந்தபோதும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மாமல்லபுரம் தப்பியது.

செங்கல்பட்டு

இயல்பு நிலைக்கு திரும்பியது

மாண்டஸ் புயலானது நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக காணப்பட்டது. புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

மாமல்லபுரம், கொக்கிலமேடு, நெம்மேலிகுப்பம், வெண்பருஷம், பட்டிபுலம், எடையூர் குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக மாமல்லபுரம் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் சுற்றுலா பயணிகள் வரத்து வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது.

சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்ததால் கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கடல் சீற்றம்

கடலில் பலத்த சீற்றம் இருந்ததால் குளிப்பதை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றதை காண முடிந்தது.

நேற்று புயலால் செல்போன் டவர்களில் உள்ள மின் வயர்கள் சேதமடைந்ததால் செல்போன் இணையதள சேவை முடங்கியது. அதனால் சுற்றுலா வந்த பயணிகள் பலர் தொல்லியல் துறையின் ஆன்லைன் நுழைவு சீட்டு பதிவு செய்ய முடியாமல் பரிதவித்தனர். அவர்கள் அங்குள்ள நுழைவு சீட்டு கட்டண மையத்தில் ரூ.40 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு வாங்கி புராதன சின்னங்களை பார்த்துவிட்டு சென்றதை காண முடிந்தது. நேற்று மாலை 4 மணிக்கு செல்போன் டவர்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு மாமல்லபுரத்தில் சிக்னல் கிடைத்து அனைத்து செல்போன் சேவையும் இயங்கியது குறிப்பிடத்தக்கது.

சிமெண்டு சாலை சேதம்

மாண்டஸ் புயலால் மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவர் பகுதியில் கடல் அலைகள் பலத்த சீற்றத்துடன் கரைப்பகுதியை நோக்கி வந்ததால் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் தாக்கியதால் 15 மீட்டர் நீளமுள்ள சிமெண்டு சாலை பல துண்டுகளாக சேதம் அடைந்தது.

அதேபோல கடற்கரையில் உள்ள ஒரு மின்கம்பம் முறிந்து கீழே விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலின் 5 நிழற்குடைகள் சேதம் அடைந்தது

அதிகாரிகள் ஆய்வு

சேதங்கள் குறித்து ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை வழங்குவதற்காக சென்னையில் இருந்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் 2 பேர் நேற்று மாமல்லபுரம், தேவனேரி பகுதிக்கு வந்து சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு, சேத விவரங்கள் குறித்து அறிக்கை தயாரித்தனர். சேத விவரங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்தும் சென்றதை காண முடிந்தது.

நிவாரண உதவி

இந்த நிலையில் தேவனேரியில் மாண்டஸ் புயலால் பாதிப்புக்குள்ளான இடங்களை சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சீபுரம் தொகுதி எம்.பி.செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் பார்வையிட்டு, அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினர்.


Next Story