நோயாளியிடம் செல்போன் திருடியவர் கைது

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியிடம் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை பகுதியைச் சேர்ந்தவர் வேலு என்பவரின் மகன் முருகேசன் (வயது 58). இவர் நேற்று காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். புறநோயாளிகளுக்கான அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டிருந்தபோது இதை நோட்டமிட்ட திருப்பாலைக்குடியைச் சேர்ந்த முகமது கனி (47) என்பவர் நைசாக முருகேசனின் செல்போனை எடுத்துக்கொண்டு நழுவி சென்றார். இது குறித்து அவர் ராமநாதபுரம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் முருகேசனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது போலீசார் மற்றும் முருகேசன் தரப்பினரை முகமதுகனி தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அவர் பஸ்சில் சென்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அவர் செல்லும் இடம் குறித்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் பஸ்சில் ஜெகதாப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்த முகமதுகனி போலீசார் மற்றும் முருகேசன் தரப்பினரிடம் தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசுவதை கண்ட பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி முகமது கனியை ஒப்படைத்துள்ளனர். அங்கு போலீசார் முகமதுகனியிடம் விசாரணை நடத்திய போது ராமநாதபுரம் போலீசார் செல்போனில் அழைத்து விவரத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்ந்து முகமது கனியை கைது செய்தனர்.






