தனியார் நிறுவன மேலாளரிடம் பணம் திருடியவர் கைது

விழுப்புரத்தில் தனியார் நிறுவன மேலாளரிடம் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
திருச்சி மாவட்டம் மினிக்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் குகன் (வயது 32). இவர் விழுப்புரம் கட்டபொம்மன் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் ஏரியா மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய மணிபர்சை தலையணைக்கு அடியில் வைத்திருந்தார். அந்த சமயத்தில் யாரோ மர்ம நபர், ஜன்னல் கம்பியில் போடப்பட்டிருந்த கொசு வலையை கிழித்து அதன் வழியாக உள்ளே புகுந்து குகனின் மணிபர்சில் இருந்த ரூ.700-ஐ திருடிச்சென்று விட்டார். இதுகுறித்து குகன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற விழுப்புரம் சாலாமேடு என்.எஸ்.கே. நகரை சேர்ந்த கோபிநாத் (40) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.