கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்த தனியார் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரித்வி நகரில் வசித்து வரும் சுந்தரம். தேர்வழி ஊராட்சியின் குடிதண்ணீர் மோட்டார் பம்பு ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சேது (வயது 26). கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த மாதம் 25-ஆம் தேதி இரவு வேலை முடிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சேது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி பெரியார் நகரையொட்டி செல்லும் சாலையில் வரும்போது வேகத்தடை ஒன்றில் ஏறும்போது நிலைத்தடுமாறினார். இதனால் மோட்டார் சைக்கிளுடன் சேது எதிர்பாராமல் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் சிசிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
சேதுவின் பெற்றோர் விவரம் அறிந்து அஸ்பத்திரிக்கு அலறி கொண்டு வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேதுவை அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சேது, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.